யாழில் வீதியை மறித்து நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாட்டம்! – 10 இளைஞர்களுக்கு மறியல்.
யாழ்., பருத்தித்துறை பிரதான வீதியில் கோப்பாய் சந்திக்கு அண்மையாக நள்ளிரவு நேரம் பயணித்த தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையின் பெண் சட்ட மருத்துவ அதிகாரியின் கார்க் கண்ணாடிக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் மது அருந்தியிருந்தனர் என்று மருத்துவ சோதனைகளில் தெரியவந்துள்ளது.
மானிப்பாய் – சங்குவேலிப் பகுதியில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் வீதியால் சென்ற ஒருவரை வழிமறித்து சோதனையிட்டனர். இதன்போது அவரை மதுபோதையில் வாகனத்தை செலுத்திய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக தெல்லிப்பழை சட்ட மருத்துவ அதிகாரியுடன் பொலிஸார் தொடர்பு கொண்டுள்ளனர். மருத்துவர் தனது வதிவிடத்துக்கு அண்மையாகவுள்ள கோப்பாய் ஆதார மருத்துவமனைக்கு வருமாறு பொலிஸாரை அறிவுறுத்திவிட்டு, நேற்றுமுன்தினம் நள்ளிரவு நேரம் மருத்துவமனை நோக்கிப் பயணித்துள்ளார்.
அப்போது, பருத்தித்துறை பிரதான வீதியில், கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு அண்மையாக வீதியை முழுவதுமாக மறித்து 10 இளைஞர்கள் வரையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீதியால் பயணித்த சட்டமருத்துவ அதிகாரியின் காரின் மீதும் ‘ரோச் லைட்’ வெளிச்சத்தை பாய்ச்சி அதனை மறிக்க முற்பட்டுள்ளனர். இருப்பினும் சட்ட மருத்துவ அதிகாரி பிரதான வீதியின் கரையோரமாக காரைச் செலுத்தியுள்ளார். இதன்போது அவரது காரின் பக்கக்கண்ணாடி உடைந்துள்ளது.
சட்டமருத்துவ அதிகாரி கோப்பாய் ஆதார மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு வந்த மானிப்பாய் பொலிஸாரிடம் நடந்த விடயத்தை அவர் தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு நின்ற 10 இளைஞர்களையும் கைது செய்தனர். அவர்களின் 2 மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் நேற்று மாலை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.