தேசிய பிரச்சினைக்குத் தீர்வு: சர்வகட்சிக் கூட்டத்தை 13 இல் நடத்த ஜனாதிபதி திட்டம்!
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தமது உத்தேசத் திட்டமான சர்வகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைத் தொடர்பு கொண்டு அந்தத் திகதியில் அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை அவர் பணித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று தம்மைச் சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஜனாதிபதியே நேரடியாக இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“கட்சித் தலைவர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் வசதிகளையும் கணக்கெடுத்து, எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவைக் கேட்டுள்ளேன். அவர் உரிய ஒழுங்குகளைச் செய்வார் என்று ஜனாதிபதி என்னிடம் கூறினார்” – என்று ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்தார்.
இந்த வாரத்தில் வரவு – செலவுத் திட்ட விவாதம் மற்றும் அதன் மீதான வாக்கெடுப்பு முடிந்த பின்னர், 11ஆம் திகதி தொடங்கும் வாரத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தலாம் என நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தமை தெரிந்ததே.