”இளையராஜாவை வைத்து அரசியல்.. காமெடி செய்யும் பாஜக” – திருமாவளவன் பளிச் பேச்சு.!
ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜி- 20 கூட்டமைப்பு விளக்கக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க திருமாவளவன் டெல்லி செல்கிறார்.
அப்பொது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தியாவில் ஜி-20 மாநாடு நடக்க இருப்பது வரவேற்கத்தக்கது. இன்று டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்ததன் அடிப்படையில் இன்று நானும் கூட்டத்தில் பங்கேற்க செல்கின்றேன்” என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, “தமிழ்நாட்டில் பாஜகவினர் காமெடி செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களே நகைச்சுவை செய்துவிட்டு அவர்களை சிரித்துக் கொள்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவை கண்டு யாரு அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை.
தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக, இளையராஜா போன்றவர்களை வைத்து இங்கு அரசியல் செய்யலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறது. காசியில் தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தி உள்ளனர். எனவே தமிழக மக்கள் அதை பொருட்படுத்தவில்லை” என கூறினார்.
மேலும், “ஜெயலலிதாவின் கீழ் இயங்கிய அதிமுகவினர் தற்போது 4 குழுக்களாக பிரிந்துள்ளனர். இது அவர்கள் ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம். அதிமுக சிதறி கிடப்பது அதிமுகவிற்கு மட்டுமல்ல திராவிட அரசியலுக்கு ஊறுவிளைப்பதாக அமையும் இதை பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.