இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக எம்.பி. ஆசனத்துக்குப் ‘பூ’வா? ‘தலை’யா?
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவுக்கு எம்.பியாகப் பதவியேற்க முடியாது என்று சட்டமா அதிபரினால் நீதி அமைச்சருக்கும் நாடாளுமன்ற செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிரேமலால் ஜயசேகரவின் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக ‘பூ’வா?, ‘தலை’யா? போட்டு முடிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அப்படி நடந்தால் இலங்கைத் தேர்தல் வரலாற்றில் எம்.பி. ஒருவர் நாணயச்சுழற்சி மூலம் தெரிவு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையும்.
2015 ஆம் ஆண்டு அரசியல் கூட்டமொன்றில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த ஜுலை மாதம் பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் அவரின் பெயர் ஏற்கனவே பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தமையால் அவர் சிறையில் இருந்தவாரே போட்டியிட்டார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அதிகூடிய விருப்பு வாக்குகளையும் பெற்று அவர் வெற்றி பெற்றிருந்தார்.
எனினும், மரணதண்டனைக் கைதி என்பதனால் அவரால் எம்.பியாகச் சத்தியப்பிரமானம் செய்துகொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
இவ்வாறான நிலைமையில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்களில் வெற்றி பெறாத மற்றும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள, ஒருவருக்கு ஜயசேகரவின் எம்.பி. ஆசனம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், தேர்தல் முடிவுகளுக்கமைய கூடுதலான வாக்குகளைப் பெற்று பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள ரஞ்சித் பண்டார என்பவரும், ரோஹன கொடிதுவக்கு என்பவரும் 53 ஆயிரத்து 261 என்ற சம அளவான வாக்குகளைப் பெற்றுள்ளமையால் இவர்களில் ஒருவரையே அந்த ஆசனத்துக்குத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர், இவ்வாறான நிலைமை ஏற்படும்போது நாணயச்சுழற்சியில் ‘பூ’வா?, ‘தலை’யா? போட்டே ஆசனத்துக்குரியவர் தெரிவுசெய்யப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.