இலங்கையில் 6 மணிநேரம் மின்வெட்டு?
மின்சாரக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த வருடத்தில் 6 மணித்தியால மின்சார விநியோகத் தடைக்குச் செல்ல வேண்டியேற்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மின்சார அலகு ஒன்றுக்கான செலவு 56 ரூபா 90 சதமாக உள்ளபோதும், அதில் அரைவாசிக் கட்டணமே மின்சாரப் பாவனையாளர்களிடம் இருந்து அறிவிடப்படுகின்றது.
எனவே, இந்த நட்டத்தை ஈடுசெய்ய முடியாதுபோனால், எதிர்காலத்தில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
இதன் காரணமாக அடுத்த வருடத்தில் 6 மணித்தியாலங்கள் வரையில் மின்சார விநியோகத் தடையை மேற்கொள்ள வேண்டியேற்படும்.
இதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற போதும், அமைச்சரவை இதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதேநேரம் சட்டமா அதிபரும் தமது ஒப்புதலை வழங்கியுள்ளார்” – என்றார்.