மணிவண்ணன் மீது எனக்கு முரண்பாடில்லை அவருக்கு என்மீது முரண்பாடு உள்ளதோ தெரியவில்லை – சுகாஷ்

எனக்கு நண்பன் மணிவண்ணன் மீது எதுவித முரண்பாடும் கிடையாது. ஆனால் மணிவண்ணுக்கு என்மீது ஏதேனும் முரண்பாடு இருக்கின்றதா இல்லையா என்பதனை அவரிடமே கேட்டறியவேண்டும். இரு தனிப்பட்ட நபர்களின் பிரச்சினையை வைத்து அரசியல் முடிவுகளை எடுக்கும் அளவிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரம்தாழ்ந்த அமைப்பல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கனகரட்னம் சுகாஸ் தெரிவித்தார்.
கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியத்திற்கு ஊடகவியலாளர்கள் ஆற்றிய பங்கு அளப்பெரியது. கடந்த சில நாட்களாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி நடைபெற்ற போராட்டம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியானமை எங்களை வேதனையடையச் செய்துள்ளது.
எங்களுடைய கட்சியும் தலைமையும் யாழ்பாணம் – கிட்டுப்பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் கிளை நிறுவனத்திடம் மகஜரை கையளிக்க இருந்த அமைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற அழைப்பை ஏற்று கிட்டுப்பூங்காவில் இடம்பெற்ற போராட்டத்தில் நாம்பங்குபற்றியிருந்தோம்.
யாழ்ப்பாணப் பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பேரணியில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. யாழ் பேரூந்து நிலையத்தில் ஆரம்பமான பேரணி இலங்கை அரசின் யாழ்பாண முகவராக உள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பதாக இருந்தது. அரசின் முகவரிடம் மகஜரை கையளிப்பதை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை இனங்கிச் செயற்படுவதாகவே நாம் பார்கின்றோம்.
சர்வதேச விசாரணையை கோரி நீதியை நிலைநாட்ட போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆழ்மன அபிலாசைகளுக்கு எதிரானதும் முரனானதுமான ஒன்றாக இதனை கருதுகின்றோம். மேலும் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சில அமைப்புக்கள் எமது கட்சித் தலைமை தொடர்பான ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன. அத்தகைய நடைமுறை பிரச்சினைகளாலேயே கலந்து கொள்ளவில்லை.
கிட்டுப் பூங்காவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அலைந்து மரணமடைந்த உறவுகளுக்கே அஞ்சலி செழுத்தினோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. ஆனால் ஊடகங்கள் அதனை தவறாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளன.
மணிவண்ணனின் விவகாரம் குறித்து இன்னமும் 30 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியகுழு விசாரித்து வரும் நிலையில், விசாரணைகள் முடிவடையாமல் எடுத்த எடுப்பில் எதனையும் கூறிவிட முடியாது. விசாரணையின் பின்னர் தமிழ் மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெளிவாக அறிவிப்போம். நண்பர் மணிவண்ணனின் மான்பையும் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு உண்டு. ஒரு நபரை எடுத்த எடுப்பில் தூக்கியெறிய முடியாது.
கட்சியின் கொள்கையையும், தமிழ் தேசியத்தையும், தலைமையையும் ஏற்று நடக்கக்கூடியவர்கள் எமது கட்சியில் தொடர்ச்சியாக இருக்கலாம். இதற்கு மாறாக பதவிகளும், தனி நபர்களுமே முக்கியம் என கருதும் நபர்கள் வெளியேறுவதற்கான பூரன சுதந்திரம் எமது கட்சியில் உண்டு.
உள்ளூராட்சி நியமன உறுப்பினர்களை ஒருவருடத்திற்கு ஒரு முறை மாற்றுவதென ஆரம்பத்திலேயே முடிவெடுத்திருந்தோம். சுழற்சி முறையில் பலருக்கு சந்தர்ப்பம் வழங்குவதென முடிவெடுத்திருந்தோம். அந்தவகையிலேயே எமது கட்சியின் உள்ளூராட்சி நியமன உறுப்பினர்களை சுழற்சிமுறையில் மாற்றினோம். இதற்கும் மணிவண்ணின் விடையத்திற்கும் எதுவித சம்பந்தமுமில்லை, என்றார்.