கொழும்பில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொலை!

கொழும்பில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் மாளிகாவத்தை – ஜயந்த வீரசேகர மாவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குறித்த நபர் இரும்புக் குழாய்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்துள்ளார்.
மாளிகாவத்தையைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நீண்ட நாட்களாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், அவரைக் கைதுசெய்வதற்காக மாளிகாவத்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.