ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை கடத்தல்..ஸ்கெட்ச் போட்டு செய்த கும்பல்!
போலி ஆம்புலன்ஸ் வண்டி வைத்து பிறந்த குழந்தைகளை விற்பனை செய்த நான்கு பேரை பாட்டியாலா போலீசார் கைது செய்தனர்.
குழந்தைகள் இல்லை என்று இன்றைய பெற்றோர் பலர் மருத்துவமனைகளை நாடும் காட்சிகளை பார்த்துள்ளோம். பஞ்சாப் – சண்டிகர் பகுதியில் இதை ஒரு காரணமாக வைத்து குழந்தைகளை வாங்கி விற்று தொழில் செய்து வந்துள்ளனர். ஏழைப் பெற்றோரிடம் இருந்து குறைந்த விலைக்கு பிறந்த குழந்தைகளை வாங்கிக் கொண்டு குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு ஒரு கும்பல் சட்டவிரோதமாக விற்று வந்த செய்தி போலீசுக்கு தெரியவந்துள்ளது.
பாட்டியாலா மூத்த காவல் கண்காணிப்பாளர் வருண் ஷர்மா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோதமாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை விற்பதாகவும், வாங்குவதாகவும் தங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த கும்பலை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
லோவல் கிராமத்தைச் சேர்ந்த பல்ஜிந்தர் சிங், பாட்டியாலாவைச் சேர்ந்த அமந்தீப் கவுர், சுனத்தின் லலித் குமார், திரிபுரியைச் சேர்ந்த புபிந்தர் கவுர், பீகாரைச் சேர்ந்த சுஜிதா, பர்னாலாவைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் மற்றும் முக்த்சர் சாஹிப்பைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் அடங்கிய கும்பல் இந்த வேலைகளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் இந்த குழந்தைகளை நாபா மற்றும் சுனம் ஆகியோரிடம் இருந்து வாங்கியுள்ளனர். குழந்தைகளை வாங்கவும் விற்கவும் போலீசுக்கு சந்தேகம் வராமல் இருக்க தங்கள் காரை ஆம்புலன்ஸ் போல மாற்றியுள்ளனர். இந்த போலி ஆம்புலன்ஸ் மூலம் தான் குழந்தை விற்பனை நடந்துள்ளது.
“சுக்விந்தர் சிங் ஒரு கைக்குழந்தையை வாங்க சமனாவுக்கு வந்து கொண்டிருந்தார், எங்களுக்கு அவர்களது குழந்தை ஒப்பந்தம் பற்றிய தகவல்கள் கிடைத்தன. எனவே, ரகசியத் தகவலின் பேரில், பொறி வைத்து அவர்களை கைது செய்தோம்,” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஆம்புலன்ஸ், மற்ற இரண்டு வாகனங்கள், ₹ 4 லட்சம் மற்றும் இரண்டு புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் போலீசார் மீட்டுள்ளனர் .
குற்றம் சாட்டப்பட்டவர் மீது சதர் சமனா காவல் நிலையத்தில் குழந்தை கடத்தல் என்ற காரணத்திற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370, 120 மற்றும் சிறார் நீதி பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 81 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.