நடுநிலையும், ஆதரவும் ஒன்றா? – மனோவுக்கு வேலுகுமார் பதிலடி.
‘நடுநிலை’யும் ‘ஆதரவு’ம் ஒன்றா என்பது ஆறாம் அறிவு உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரியும் – புரியும்.
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் நடுநிலை வகித்திருந்தார். இதையடுத்து அவர் உடனடியாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுகின்றார் என்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. அறிவித்திருந்தார்.
மனோவின் இந்த அறிவிப்புக்குப் பதிலடி வழங்கும் வகையில் வேலுகுமார் எம்.பி. தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
‘நடுநிலை’யும் ‘ஆதரவு’ம் ஒன்றா என்பது ஆறாம் அறிவு உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரியும் – புரியும். ஆக தனக்கு வந்தால் ரத்தம், மற்றையவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டி எனக் கூறித் திரிபவர்களுக்கு அது புரியாது.
‘ஜெனிவா’ தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை வரும் போது, ‘நடுநிலை’ வகிக்கும் நாடுகள்கூட ‘எதிர்’ போக்கையே கடைபிடிக்கின்றன என்று அரசியல் பாடம் எடுப்பவர்களுக்கு, தற்போது ‘நடுநிலை’ என்பது மாறி விளங்குவது ஏன்? இது அரசியலில் எந்த டிசைனைச் சாரும்?
தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் உள்ளன என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள், இப்படியான இழிநிலை அரசியலில் ஈடுபடுவது இயல்பு. இதனைத் திருத்திக்கொண்டு, மக்கள் பக்கம் வரவேண்டும் என்றே நான் வலியுறுத்தியுள்ளேன்.
ஒன்றும், ஒன்றும் மூன்று எனக் கூற முற்படுபவர்களுக்கு நடுநிலைகூட ஆதரவாகத் தெரியலாம். அது பற்றி எவரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை – என்றுள்ளது.