வெளியே வராதீங்க.. அத்தியாவசிய பொருட்களை வாங்கி வச்சுகோங்க.. தமிழ்நாடு அரசு அலெர்ட்..
மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல், கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை உயர் அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தொடர்ந்து புயல் குறித்த அறிவிப்புகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் எனவும்; மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதிப்பிற்குள்ளாகும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், தேவையற்ற பயணத்தை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடற்கரைக்கு செல்வதை தவிர்த்து, காற்று வீசும் போது மரத்தின் அடியில் நிற்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர் நிலைகளின் அருகிலும், திறந்த வெளியிலும் செல்பி எடுப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.