இலவசம் வழங்கும் அரசியலை குஜராத் மக்கள் நிராகரித்துள்ளனர் – அமித் ஷா கருத்து

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்று தொடர்ந்து 7ஆவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக 156 இடங்களை கைப்பற்றி மெகா வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சி 17 இடங்களை மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், புதுமுகமான ஆம் ஆத்மிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவின் பூபேந்திர படேல் வரும் 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்கிறார். இந்நிலையில், குஜராத் தேர்தல் வெற்றி குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில் “குஜராத் மக்கள் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியலை தேர்வு செய்துள்ளனர். போலி வாக்குறுதிகள், இலவசங்கள், வாக்குவங்கி அரசியலை புறம் தள்ளிய மக்கள், பிரதமர் மோடியின் வளர்ச்சி மாடலுக்கு வரலாறு காணாத வெற்றி மூலம் அங்கீகாரம் தந்துள்ளனர். இந்த வெற்றியானது பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் முழு மனதுடன் பாஜகவை ஆதரித்ததுள்ளனர் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது” என்றார்.

கடந்த தேர்தல் வரை பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மட்டுமே நேரடி போட்டி இருந்த நிலையில், இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் முழுவீச்சில் களமிறங்கியதால் குஜராத் தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது. குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே ஆம் ஆத்மி கட்சி வரிந்துகட்டி களத்தில் இறங்கியது.

இலவச மின்சாரம், உதவித்தொகை என பல இலவச வாக்குறுதிகளை மக்களிடம் வாரி இரைத்தது. இவை அனைத்தும் மக்கள் நலத் திட்டங்கள் என்று ஆம் ஆத்மி கூறினாலும், பாஜக இதை இலவசத்தை காட்டி மயக்கி வாக்குகளை பெறும் கலாச்சாரம் என கடுமையாக சாடி வந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 5 இடங்களை மட்டுமே வென்று தோல்வியை சந்தித்த நிலையில், மக்கள் போலி இலவச வாக்குறுதிகளை நிராகரித்துள்ளதாக பூடமாக மேற்கோள் காட்டியுள்ளார் அமித் ஷா.

Leave A Reply

Your email address will not be published.