வடக்கு, கிழக்கை வதைத்த புயல் குடாநாட்டிலும் பெரும் சேதங்கள்.
* வீதிகளில் அடியோடு சாய்ந்தன மரங்கள்
* வீடுகளும் சேதம்; போக்குவரத்தும் பாதிப்பு
* பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு
‘மாண்டஸ்’ புயலின் தாக்கம் வடக்கு, கிழக்கில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீசிய அதிக காற்றின் காரணமாக பாரிய மரங்கள் பல சாய்ந்து வீழ்ந்துள்ளதோடு சில வீடுகளும் சேதமடைந்துள்ளன.
நேற்றிரவு யாழ். குடாநாட்டிலும் அதிக மழையுடன் கடும் குளிர் நிலவிய அதேநேரம் அதிக காற்றும் வீசியது.
இதன் காரணமாகப் பல இடங்களில் வீடுகளிலும், வீதிகளிலும் பெருமளவு மரங்கள் அடியோடு சாய்ந்து வீழ்ந்தன. இதனால் பல மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டன.
ஊர்காவற்றுறை மற்றும் காரைநகரில் இரு பனை மரங்கள் வீடுகளின் மீது வீழ்ந்தமையால் இரு வீடுகளும் சேதமடைந்தன.
இதேபோன்று மருதங்கேணி – வத்திராயனில் ஒரு பனை முறிந்து வீதியில் வீழ்ந்தமையால் சில வீடுகளுக்கான மின்சாரம் முற்றாகத் தடைப்பட்டது.
இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட இடங்களில் பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்து வீதியில் வீழ்ந்தன.
வீதியில் வீழ்ந்த மரங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபையின் பணியாளர்களால் இன்று பகல் அகற்றப்பட்டன.
இதேவேளை, கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை பிரதேசங்களிலும் சேதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்திலிருந்து தீவகங்களுக்கான படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.