வடக்கில் புயலின் கோரத்தாண்டவத்தால் 254 வீடுகள் சேதம்; 151 கால்நடைகள் சாவு.
‘மாண்டஸ்’ புயலின் தாக்கத்தால் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் நேற்று ஒரே நாளில் 254 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 151 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன என்று மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றுப் பகலும் இரவும் வீசிய புயல் காற்றாலேயே 254 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் பயன்தரு மரங்கள் பல முறிந்து வீழ்ந்து அழிவடைந்துள்ளன. அதேவேளை, கடும் குளிருடன் மழை பெய்ததால் 136 மாடுகளும், 15 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்திலே அதிக வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்மாவட்டத்தில் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்த அதேநேரம் 22 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இங்கு 129 கால்நடைகள் உயிரிழந்த அதேநேரம் 36 வீடுகள் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 31 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மாவட்டத்தின் பெரும் வாழ்வாதாரமான வாழைச்செய்கை அதிகளவில் அழிவடைந்துள்ளது. வாழைத் தோட்டங்கள் நிறைந்த நீர்வேலி, கந்தன், நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் வாழை மரங்கள் குலையுடன் முறிந்து வீழ்ந்துள்ள. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று வாழைத்தோட்ட உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதேநேரம் வவுனியா மாவட்டத்தில் 34 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 12 வீடுகளும் சேதமடைந்துள்ளன.