சாகும் உறவுகள் : கண்டு கொள்ளாத சொந்தங்கள்

சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெறும் சிவாஜிக்கும் நாகேசுக்கும் இடையிலான உரையாடலை இலகுவில் யாரும் மறந்துவிட முடியாது. கேள்வி பதில் பாணியில் அமைந்த அந்த உரையாடலை மாற்றியமைத்து நகைச்சுவை நாடகமாகி 80களில் பல இடங்களிலும் அது மேடை கண்டது.

அந்த உரையாடலில் ஒரு கேள்வி பார்க்கக் கூடாதது?
பதில், ஹோட்டலின் பின்புறம். பளபளவென மின்னும் உணவகங்களின் முன் பக்கத்தைப் பார்க்கும் நாம், சமையலறையின் உள்ளே சென்று பார்த்தால் சாப்பிடவே தோன்றாது என்பதை விளக்கும் வகையில் கிண்டலாக இந்த வசனங்கள் அமைந்திருந்தன.

கிட்டத்தட்ட உலகின் நிலையும் இவ்வாறுதான் அமைந்துள்ளது.

விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள மனித இனம், சூரியக் குடும்பத்துக்கு அப்பாலும் உயிரினம் உள்ளதா என அறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பூமியின் பல இடங்களிலும் மனிதர்கள் பட்டினியினால் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். வல்லரசு நாடுகளின் கடைக்கண் பார்வையே போதும் இவ்வாறு பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் மக்களின் உயிர்களைக் காக்க. ஆனால், அந்த நாடுகளின் முன்னுரிமைப் பட்டியலில் குறிப்பிட்ட மக்கள் இடம் பெறாமையினால் அவர்கள் மரணத்தைத் தழுவியே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

உலகம் ஒரு பூகோளக் கிராமமாக மாறிவிட்டது எனப் பெருமை பேசும் நாம், அயலான் ஒருவன் பட்டினி கிடக்கிறான் என்பதைக் கண்டு கொள்ளாமல் அன்றாட நிகழ்வுகளில் கவனம் செலுத்திக் களிப்பாய் இருக்க எவ்வாறு முடிகிறது? அபிவிருத்தி, சுபீட்சம், மகிழ்ச்சி, ஜனநாயகம், நாகரிகம் போன்ற சொல்லாடல்களின் பின்னால் இவை போன்ற விடயங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுவதைத் தெரிந்திருந்தும், அது போன்ற எதுவும் நிகழவில்லை எனப் பாவனை செய்வதிலும் நாம் திறமையானவர்களாக இருக்கிறோம். இது போன்ற செய்திகள் எமது காதுகளை வந்தடையாமல் பார்த்துக் கொள்வதில் கூட வல்லரசுகள் கவனம் கொண்டு செயற்பட்டு வருகின்றன என்பது வேறு விடயம்.

உணவு விடுதி ஒன்றின் சமையலறை சுத்தமாக இல்லை என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டும், முகப்பை அலங்காரமாக வைத்துக் கொள்வதற்கு ஒப்பானதே இந்தப் போக்கும்.

உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்று ஆபிரிக்கா கடந்த 70 ஆண்டுகளில் காணாத பட்டினிப் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளதாகக் கூறுகிறது. குறிப்பாக ஆபிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும் பிரதேச நாடுகளான ஜிபுற்றி, சோமாலியா, சூடான், தென் சூடான், எதியோப்பியா, உகண்டா மற்றும் கென்யா ஆகிய நாடுகள் மிக மோசமான நிலையை எதிர்கொண்டு உள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள 37 மில்லியன் மக்கள் பட்டினிச் சாவை நோக்கிச் செல்வதாகக் கூறும் அறிக்கை, இந்த நிலையில் இருந்து மக்களை மீட்பதற்கு உலக நாடுகளும், தொண்டு நிறுவனங்களும் நிதி உதவி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

இயற்கை கூட அந்த மக்களை வஞ்சிக்கின்றது. ஒரு புறம் வரலாறு காணாத வரட்சி, மறுபுறம் தொடர்ச்சியான வெள்ளம். ஆபிரிக்காவின் கொம்புப் பிராந்திய நாடுகளில் தொடர்ச்சியாக 4 பருவ மழைக் காலங்கள் பொய்த்துப் போய் விட்டன. அடுத்து வரும் பருவ மழைக் காலத்திலும் போதிய மழை வீழ்ச்சி இருக்காது என ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. மறுபுறம், தென் சூடான் போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக வெள்ளம் பாரிய சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் 40 விழுக்காடு பிரதேசம் வெள்ளப் பாதிப்புக்கு இலக்காகி உள்ளது.

உலகளாவிய அடிப்படையில் இயற்கையைப் பாதிக்கும் கார்பன் உமிழ்வுகளில் 4 விழுக்காடு மாத்திரமே ஆபிரிக்க நாடுகளால் வெளியிடப் படுகின்றன. ஆனால், இயற்கைப் பேரிடர்களில் அதிகம் ஆபிரிக்காவிலேயே நிகழ்கின்றது.

ஆயுத மோதல்களால் சின்னா பின்னமாகிக் கிடந்த இந்தக் கண்டத்தின் பொருளாதாரத்தை அண்மைய கொரோனாப் பெருந் தொற்று மேலும் மோசமாகச் சிதைத்து உள்ளது. இதிலிருந்து மீண்டு வருவது என்பது பாரிய சவாலாக உள்ளது.

பட்டினிச் சாவு என்றதும் நம் அனைவருக்கும் மனதில் உடனடியாக நினைவுக்கு வரும் நாடு சோமாலியா. 16 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் 40 விழுக்காடு மக்கள் தற்சமயம் பட்டினிச் சாவை எதிர்கொண்டு உள்ளனர். இங்கே போசாக்குக் குறைபாடு காரணமாக நிமிடத்துக்கு ஒரு குழந்தை என்ற வீதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை காணப்படுகிறது.
சோமாலியாவில் நிலவும் பஞ்சம் தொடர்பாக முறையான பிரகடனம் இன்னமும் வெளியிடப் படவில்லை. அத்தகைய அறிவிப்பு எந்தக் கணத்திலும் வெளியாகலாம். குறித்த பிரகடனம் வெளிவரும் வேளை நிலமை கட்டுக்கடங்காமல் போய்விடும் எனக் கூறி அதிர்ச்சி அளிக்கின்றன தொண்டு நிறுவனங்கள்.

பத்து ஆண்டுகளின் முன்னர், 2011 இல் ஏற்பட்ட பஞ்சத்தில் 250,000 பேர் மரணத்தைத் தழுவியிருந்தனர். இவர்களுள் அரைவாசிப் பேர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தனர். தற்போது சூழ்ந்துள்ள பஞ்சம் காரணமாக 300,000 பேர் வரை இறக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மூன்றாவது பஞ்சம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
உணவு கிடைக்காமை ஒருபுறம் இருக்க சுத்தமான குடி நீருக்கும் அந் நாட்டில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அசுத்த நீரினால் பரவும் வாந்தி பேதி போன்ற நோய்களும் தீவிரமாகப் பரவி வருகின்றது.

உணவு மற்றும் சுத்தமான குடிநீர் என்பவற்றை உடனடியாக வழங்கி, சோமாலியாவில் எதிர்பார்க்கப்படும் பஞ்சத்தைத் தடுத்துவிட ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்கென 1.5 பில்லியன் அமெரிக்க டொலரைத் திரட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் மூன்றில் இரண்டு பங்கு நிதி மாத்திரமே இதுவரை கிடைத்து உள்ளது. இதற்குத் தேவையான நிதியை வழங்குவதில் செல்வந்த நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்பதே கசப்பான யதார்த்தம். வேறு வகையில் சொல்வதானால் உலகின் ஒரு மூலையில் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதனுக்கு உணவளித்து அவனைச் சாவிலிருந்து காக்க அந்த நாடுகள் தயராக இல்லை.

உலக வல்லரசான அமெரிக்கா இந்த வருடம் பெப்ரவரி; 24இல் உக்ரைன் போர் ஆரம்பமான நாளில் இருந்து இன்றுவரை 17.6 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளபாட மற்றும் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இன்னமும் தொடர்ந்தும் உதவிகளை வழங்க அமெரிக்கா வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தேவையோடு ஒப்பிடுகையில் அதைப் போன்று பல மடங்கு நிதியை போருக்குச் செலவிடத் தயாராக உள்ள அமெரிக்கா பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காக்க இது போன்ற நிதியை வழங்கத் தயாராக இல்லை. காரணம், அமெரிக்காவின் முன்னுரிமைப் பட்டியலில் பாதிக்கப்படும் மக்கள் இல்லை. அவர்கள் கறுப்பர்கள், ஆபிரிக்கர்கள், மேலதிகமாகச் சொல்வதானால் பெரும்பாலும் முஸ்லிம்கள்.

அமெரிக்கா மாத்திரம் இது போன்ற மனோநிலையுடன் நடந்து கொள்கிறது எனத் தனித்துக் குற்றம் சாட்டிவிட முடியாது. உலகின் செல்வந்த நாடுகள் அனைத்துமே இதே மனோநிலையுடனேயே இது போன்ற விடயங்களை அணுகுகின்றன என்பதே உண்மை.

ஐரோப்பியக் குடும்பம் ஒன்றில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிக்கு ஆண்டொன்றுக்கு ஐயாயிரம் டொலருக்கும் அதிகமாகச் செலவு செய்யப் படுகின்றது. இவ்வாறு செலவு செய்யப்படும் ஐயாயிரம் டொலர் சோமாலியா போன்ற நாடுகளில் பல குடும்பங்களுக்கு மாதம் முழுவதும் உணவளிக்கப் போதுமானது. ஆனால், செல்லப் பிராணிக்குச் செலவு செய்யத் தயாராக உள்ளோர், அதனை சக மனிதனுக்கு முன்வந்து அளிப்பதற்கான மன விருப்பம் இல்லாமல் உள்ளனர் என்பதே கசப்பான உண்மை.

Leave A Reply

Your email address will not be published.