மனோ எம்.பியின் அறிவிப்புக்கு கண்டி மாவட்ட இளைஞர் அணி வரவேற்பு!
“கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது கண்டி தமிழர்களின் அடையாளம். தமிழர் அரசியல் இருப்புக்கான பாதுகாப்பு அரண். எனவே, அப்படியான பிரதிநிதித்துவம் அவசியம் என்ற தமிழ் முற்போďக்குக் கூட்டணியின் தலைவரின் கருத்தை வரவேற்கின்றோம்.”
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட இளைஞர் அணியின் அமைப்பு செயலாளர் ஜீவன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“எமது நாட்டில் முடியாட்சியின்போது கண்டியை ஆண்ட கடைசி மன்னன் தமிழன், குடியாட்சியின் போது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தாலும் அது இல்லாமல் செய்யப்பட்டது. எனினும், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்தே, தமிழ் பேசும் மக்களின் குரலாக எம். வேலுகுமாரை அதியுயர் சபைக்கு அனுப்பிவைத்தனர். அவரின் காலை வாருவதற்கும், கழுத்தறுப்புச் செய்வதற்கும் பேரினவாதம் கங்கணம்கட்டி செயற்பட்டது. இருந்தும் மக்களுக்காகப் பலமுனை சவாலை ஏற்று, அதில் அவர் வெற்றி பெற்றார்.
இப்படிபட்ட ஒருவர் மக்களுக்கு எதிராகச் செயற்படமாட்டார். அவர் எடுத்த முடிவில் நிச்சயம் நியாயம் இருந்திருக்கும். அதனைப் புரிந்துகொள்ளாமல் அவருக்கு எதிராக அறிவிப்புகள் வந்ததாலேயே இளைஞர்கள் என்ற அடிப்படையில் நாமும் கொதிப்படைந்தோம். கண்டி மாவட்ட தமிழர்களின் அடையாளத்தை அவ்வளவு எளிதில் விமர்சனங்களுக்கு உள்ளாவதற்கு நாமும் இடமளித்துவிடமாட்டோம்.
கண்டி மாவட்டத்துக்குத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைத்ததால் மக்கள் அடைந்த பலன் ஏராளம். அதனால்தான் கண்டி வரலாற்றில் தமிழர் ஒருவரை மக்கள் இரு தடவைகள் நாடாளுமன்றம் அனுப்பிவைத்தனர்” – என்றுள்ளது.