செக்ஸ் விளம்பரங்களால் தேர்வில் தோல்வி… யூடியூப்பிடம் ரூ.75 லட்சம் கேட்டு வழக்கு போட்ட இளைஞர்…
நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது என்ற வசனம் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒன்று. இந்த வசனத்திற்கு பொருத்தமான விதத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் வித்தியாசமான வழக்கை தொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் தனது மனுவில், அவர் போலீஸ் தேர்வுக்கு தயாராகி வருவதாகவும், இந்த தேர்வுக்கு படிக்க யூடியூப் கல்வி சேனல்களை சப்ஸ்கிரைப் செய்துள்ளார். இவர் யூடியூப் தளத்தில் படிக்க நினைத்தபோது அதில் தொடர்ச்சியாக நிர்வாணம், செக்ஸ் தொடர்பான விளம்பரங்கள் வந்து தொந்தரவு தருவதாகவும் கூறியுள்ளார். இதனால் தனது கவனம் சிதறி படிப்பு கெட்டுப் போவதாக கூறி, யூடியூப் தனக்கு ரூ.75 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே கவுல் மற்றும் ஏஎஸ் ஓகா ஆகியோரின் அமர்வு முன் வந்தது. மனு தாரரின் கோரிக்கையை பார்த்து கோபமடைந்த நீதிபதிகள், உங்களுக்கு விளம்பரம் பிடிக்கவில்லை என்றால், அதை பார்க்காமல் தவிர்க்க வேண்டியதுதானே. இது போன்ற அதிக பிரசங்கித்தனமான மனுக்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்து எங்கள் நேரத்தை வீணடிப்பது சரியா என்று கேள்வி எழுப்பியது.
எனவே, மனுதாரர் நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. நீதிபதிகளின் உத்தரவை பார்த்து பதறிப்போன மனுதாரர், நீதிமன்றம் தன்னை மன்னிக்க வேண்டும், தான் வேலையில்லாமல் இருக்கிறேன். எனவே அபராதத்தை திரும்ப பெறுங்கள் என்று கோரிக்கை வைத்தார். பின்னர் மனுதாரரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அபராதத்தை ஒரு லட்சத்தில் இருந்து ரூ.25,000ஆக குறைத்துள்ளது.