தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்டே நாம் போராடுகின்றோம் – சாணக்கியன் எம்.பி. தெரிவிப்பு.
https://we.tl/t-G1eHmgG4tB
தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்டே நாங்கள் போராடுகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்
“இலங்கை என்ற ஒரு நாடு மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரைக்கும் இந்தப் பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியெழுப்ப முடியாது என்பதை தெற்கில் உள்ள மக்களும் சரி, ஆட்சியாளர்களும் சரி உங்கள் மனதில் ஆழமாகப் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் நீதி கோரி நேற்று (10) மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பல மனித உரிமைகளுக்குப் பெயர் போன நாடுதான் இலங்கை. 1948 ஆம் ஆண்டில் இருந்து மனித உரிமை மீறல்கள் பெருமளவு நடந்தன. அவை பெரும்பான்மை சமூகத்தால் எங்கள் சமூகத்துக்கு எதிராகத்தான் நடந்தன.
அண்மைக்காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக ஜனாஸா எரிப்பு போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் கூட நடந்தன.
இதன்பின்னர்தான் தெற்கில் ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் வன்முறைகளை மேற்கொண்டனர். அங்கும் பாரிய மனித உரிமை மீறல்கள் அரங்கேறின.
இதெல்லாம் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு நாளும் அரங்கேறும் சர்வ சாதாரண விடயம் என்று ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களிடம் நாம் கூறினோம்.
மனித உரிமை மதிக்கும் நாடாக இலங்கை மாறும் வரைக்கும் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. மனிதனுக்கே மதிப்பில்லை என்றால் அவ்வாறான நாடு எவ்வாறு ஒரு ஜனநாயக வழியில் – பொருளாதார வழியில் அபிவிருத்தியடைய முடியும் என்பதைப் பெரும்பான்மை சமூகம் உணரவேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இந்தத் தாய்மார்களின் அழுகுரல்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.
நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராகப் போராடவில்லை. சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராகவே நாங்கள் போராடுகின்றோம். எங்கள் மக்களுக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்டே நாங்கள் போராடுகின்றோம்” – என்றார்.