பேச்சுக்கு இந்திய மத்தியஸ்தம் வேண்டும்! – காலவரையறைக்கும் விக்கி வற்புறுத்து.
“அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சை ஆரம்பிப்பதற்கு அவர் இணங்கவேண்டும். இதனை நான் நாளைய சந்திப்பில் வலியுறுத்துவேன்.”
இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக நாளை 13ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஒற்றை யாட்சியின் கீழான எந்தவொரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
ஏற்கனவே அரசமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ஜனாதிபதி, அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்த நாட்டில் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் துணிச்சலானதும் சரியானதுமான ஓர் அணுகுமுறையைக் கையாள்வாரா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாத நிலையே இருக்கின்றது.
ஆனால், எது எவ்வாறாக இருந்தாலும், பேச்சுகளுக்கான ஒரு முன்னோடியான 13 ஆம் திகதி பேச்சில் கலந்துகொள்வதும், இந்தப் பேச்சில் கீழ் வரும் சில அடிப்படையான விடயங்களை வலியுறுத்துவதும் அவசியம் என்று கருதுகின்றேன்.
1. அர்த்தமுள்ள ஓர் அதிகாரப் பகிர்வுக்கான பேச்சை (ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி என்பதே எமது நிலைப்பாடு) நாம் வரவேற்கின்றோம்.
2. பேச்சுக்காக 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்பதை கடந்த கால வரலாறு உணர்த்துகின்றது.
3. மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும்.
4. பேச்சு ஒரு கால வரையறைக்குள் பேசி முடிக்கப்பட வேண்டும்.
பேச்சுக்கு முன்னதாக கடினமான நிபந்தனைகளை முன்வைத்து ஜனாதிபதியின் அழைப்பை நாம் கண்மூடித்தனமாக புறக்கணிப்பது பொறுப்புள்ள ஒரு செயலாக அமையாது. அத்தகைய செயற்பாடு எமக்கான சர்வதேச ஆதரவையும் பெற்றுத்தராது. ஆனால், தீர்வு தொடர்பில் ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சை ஆரம்பிப்பதற்கு அவர் இணங்கவேண்டும். இதனை நான் 13 ஆம் திகதி சந்திப்பில் வலியுறுத்துவேன்.
இந்தப் பேச்சில் ஏனைய எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து இந்தக் கருத்தை வலியுறுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு” – என்றுள்ளது.