நான் உயிருடன் இருக்கும் வரைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.
“நான் உயிருடன் இருக்கும் வரை, ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
“உள்ளூராட்சி சபைத் தேர்தல் விரைவில் வருகின்றது. நாட்டை மீட்கக்கூடிய ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கி, எமது வெற்றி பயணத்தை மக்கள் ஆரம்பித்து வைக்க வேண்டும்” – என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாடு கொழும்பு, பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.
அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிக்கொள்வதற்கான போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் சஜித் பிரேமதாஸ மேலும் கூறியதாவது:-
“ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை ஒடுக்குவதற்கு மாளிகை மட்ட சூழ்ச்சி நடக்கின்றது. திட்டமிட்ட அடிப்படையில் சேறுபூசப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் சஜித் பிரேமதாஸ உயிருடன் இருக்கும் வரை, ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.
அவர்களும் ஒன்றுதான், இவர்களும் ஒன்றுதான் என ‘மொட்டு’க் கூட்டணியுடன் எம்மை ஒப்பிட்டு சிலர் பேசுகின்றனர். அவ்வாறு பேசுபவர்களும் ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது மாறுபட்ட சக்தியாகும். புத்தாக்க சிந்தனை கொண்ட கட்சியாகும். நாட்டை மீட்கக்கூடிய ஆளுமை எம் வசமே உள்ளது.
மக்கள் போராட்டம் இன்னமும் ஓயவில்லை. நாட்டுக்காகப் போராடியவர்கள் சிறைகளில் உள்ளனர். அவர்களுக்காக நாம் முன்னிலையாவோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி போராடுவோம். அதற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உரிய சட்டங்கள் கொண்டுவரப்படும்.
காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னெலிகொட, படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க பற்றி எவரும் கதைப்பதில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு நிச்சயம் நீதியைப் பெற்றுக்கொடுப்போம். கொள்ளை அடிக்கப்பட்ட பணம் எமது நாட்டுக்கு மீளக் கொண்டுவரப்படும்.
விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டு மக்கள் ஒன்றுசேர வேண்டும். ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்க, எமது வெற்றி அலையை ஆரம்பித்து வைக்க வேண்டும்” – என்றார்.