பலாலியில் மீண்டும் சர்வதேச விமானம் – வடக்கின் பொருளாதாரத்திற்கான வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொறோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பலாலிக்கான விமான சேவை இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளமை, வடக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமன்றி கிழக்கு மற்றும் அநுராதபுரம் பொலனறுவை போன்ற வட மத்திய மாகாணங்களும் நன்மை பயக்கவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், “அடிப்படையான வசதிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டளவு சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிக்கின்றன.
விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டம் கட்டமாக விஸ்தரிப்பதற்கு தேவையான நகர்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
இதுதொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதுடன் அமைச்சரவையிலும் பிரஸ்தாபிக்கவுள்ளேன்.
இந்நிலையில், மக்கள் சரியான முறையில் இதனைப் பயன்படுத்துவார்களாயின், எதிர்காலத்தில் இந்தியாவிற்கான சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்பதுடன் ஏனைய நாடுகளில் இருந்தும் சேவையை முனனெடுப்பதற்கும் விமான நிறுவனங்கள் முன்வரும்.
இதன்மூலம், எமது பிரதேசத்தின் சுற்றாலாத்துறை வளர்ச்சியடைவதுடன் , ஏற்றுமதி இறக்குமதி செயற்பாடுகளுக்கான நேரடி வாசலாகவும் பலாலி விமான நிலையம் செயற்படும். இது எமது மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும்” என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் போன்றவற்றிற்கு இடையிலான சரக்கு படகு சேவையை ஆரம்பிக்கும் தன்னுடைய முயற்சிகளும் விரைவில் சாத்தியமாகும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.