கூட்ட நெரிசல் தாங்கல.. சபரிமலையில் புது மாற்றம் செய்த தேவஸ்தானம்!
சபரிமலையில் பக்தர்கள் சிரமம் இன்றி திருப்திகரமான தரிசனத்தை உறுதி செய்வதற்காக எண்ணிக்கை ஒரு நாளைக்கு 90,000 ஆக குறைத்தது தேவஸ்வம் . அத்துடன் தரிசனம் செய்யும் நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாக நீடிக்கவும் முடிவு செய்துள்ளது.
சபரிமலையில் தற்போது வரை நாள் ஒன்றுக்கு 1,20,000 பேர் முன்பதிவு என்ற எண்ணிக்கை கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு நாள் 90000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்கவும் கேரளா முதல்வர் பிணறாயி விஜயன் தலைமையில் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவஸ்வம் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர் அதிகாரிகள் வாரத்தில் ஒருமுறை சபரிமலை நிலவரம் குறித்து கண்காணிக்க ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று நடை திறக்கப்பட்டு 27 வது நாள், கார்த்திகை 26 வது நாளாகும். இன்று 1,19, 480 பேர் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்துள்ளனர். நேற்று 71,537 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில் இன்று அதிகாலையில் 3 மணிக்கு பள்ளி உணர்த்தல் தொடர்ந்து நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
அதி காலை 4 மணி முதல் மதியம் 1 மணிக்கு நடை சாத்தும் வரையிலும் மேலும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 மணிக்கு நடை சாத்தும் வரைக்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இன்று காலை 10 மணி வரை 35, 227 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இன்று சன்னிதானத்தில் இருமுடி ஏந்தி செண்டை மேளத்துடன் வந்த கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.