முதலில் ஜனாதிபதித் தேர்தல்! களமிறங்குகின்றார் ரணில்!! – மஹிந்த பச்சைக்கொடி.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிரமாக ஆராய்ந்து வருகின்றார் என ஜனாதிபதி வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைக்கின்றது எனத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

எதிர்க்கட்சியில் ரணிலுக்கு நிகரான பொருளாதார நிபுணத்துவமுடைய அரசியல் முதிர்ச்சியுடைய ஒரு வேட்பாளர் இல்லாததால் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தி வெல்லலாம் என ரணில் கருதுகின்றார் எனத் தெரியவருகின்றது.

ரணிலுடன் ஒப்பிடுகையில் சஜித் பிரேமதாஸ ஒரு பலவீனமான வேட்பாளராக இருப்பதே ரணில் இவ்வாறு சிந்திப்பதற்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.

ரணில் அவ்வாறானதொரு முடிவை – ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதென்ற முடிவை எடுத்தால் அதற்குப் பூரண ஆதரவு வழங்குவதென்ற நிலைப்பாட்டில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருக்கின்றார் என்று தெரியவருகின்றது.

தனது முக்கிய சகாக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மஹிந்த இந்த விவகாரம் பற்றி பேசி இருக்கின்றார்.ரணில் அப்படியொரு தீர்மானத்தை எடுத்தால் நாம் அதற்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று அதில் கூறி இருக்கின்றார் – என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.