ரணிலுடனான தீர்வுப் பேச்சில் விட்டுக்கொடுப்புக்கு இம்மியும் இடமில்லை – சம்பந்தன் திட்டவட்டம்.

“தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரின் அழைப்புக்கிணங்க இன்று பேச்சை ஆரம்பிக்கின்றோம். எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. நாம் ஏமாறவும் தயாரில்லை.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் சர்வகட்சிக் கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் நாங்கள் பேச்சை முன்னெடுப்பதாக இருந்தால் அவரின் வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அந்தப் புதிய அரசமைப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் ஜனாதிபதியுடன் பேச்சை ஆரம்பிக்கின்றோம்.

எங்களுடைய முதல் கவனமும் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பானதே.

இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும் தமிழ் மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுக்காக எம்மாலான அனைத்துப் பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றோம். ஆனால், தமிழர்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை.

அந்தத் தீர்வைக் காணும் நோக்குடன்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சை ஆரம்பிக்கின்றோம். எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. நாங்கள் ஏமாறவும் தயாரில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.