கோர்ட் படியேறிய பொங்கல் பரிசு வழக்கு.. முக்கியத் தகவல் சொன்ன தமிழக அரசு!
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும், இதில், முன்கூட்டியே தகவல் தெரிவிக்க இயலாது என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான பொருட்களை தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய் என 20 வகையான பொருட்களை தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதற்கு பதிலாக, தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலர், தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், டிசம்பர் 19ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.