தமிழகத்தில் இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை : அரசு அதிரடி உத்தரவு

விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கும் வகையில், அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு, தமிழ்நாடு அரசு 6 மாதங்கள் தற்காலிக தடை விதித்துள்ளது.

வேளாண் பணிகளுக்கு பல்வேறு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், 2017-18ம் ஆண்டு நிகழ்ந்த விவசாயிகள் தற்கொலை சம்பவங்களுக்கு பூச்சிக்கொல்லிகளே முக்கிய காரணமாக இருந்ததாக, வேளாண் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், தற்கொலைகளை தடுக்கும் விதமாக அபாயகரமான 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், மோனோக்ரோடோபோஸ் (Monocrothophos), ப்ரோஃபினோபோஸ் (Profenophos), அசபேட்(Acephate), ப்ரோஃபினோபோஸ் சைபர்மெத்ரின் (Profenophos Cypermethrin), குளோர் பைரிபோஸ் சைபர்மெத்ரின்(Chlorpyriphos Cypermethrin), குளோர்பைரிபோஸ் (Chlorpyriphos) ஆகிய 6 பூச்சிக்கொல்லிகளுக்கு, 60 நாட்கள் தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

மேலும் மஞ்சள் பாஸ்பரஸ் எனும் எலிக்கொல்லி மருந்துக்கும் நிரந்தர தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை மருந்துகள் முறையாக பதிவு செய்யப்படாத பூச்சிக்கொல்லி என்றும், பெட்டிக்கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து இடங்களிலும் கிடைப்பதாகவும் வேளாண் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

விஷத்தன்மை கொண்ட இந்த மருந்து மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்தானது எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.