அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல்- 137 விமானங்கள் ரத்து.
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை கடுமையான பனிப்புயல் தாக்கியது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் பனி கொட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பனிப்புயலால் நியூயார்க், பென்சில்வேனியா, ஒரேகான், நெவாடா, இடாஹோ, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, வயோமிங், கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பனிப்புயல் காரணமாக சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இதனிடையே பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று முன்தினம் 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், இன்னும் சில விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வேறு இடங்களுக்கு மாற்றிவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.