கரைவேட்டிக்கு மத்தியில் கேஷுவல் டிரஸ், ஜீன்ஸ் பேண்டுடன் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9:30 மணிக்கு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற விழா தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சராக பதவி ஏற்றபின் மேடையில் முதலமைச்சரின் காலில் விழுந்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார்.
இந்த விழாவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, திமுக எம்.பி கனிமொழி, செந்தாமரை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் இணைக்கப்பட்ட பின் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. பொதுவாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் போது குழு புகைப்படம் எடுப்பார்கள். புதிதாக அமைச்சர் மாற்றம் செய்யப்படும்போது, அனைத்து அமைச்சர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இந்த புகைப்படத்தை அரசு புகைப்பட கருவூலத்தில் வைக்கவும், அதிகாரபூர்வ பக்கங்களில் பயன்படுத்தப்படும்.
இந்த புகைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கடைசி இடத்திற்கு முன்னால் அமர்ந்து இருந்தார். உதயநிதி ஸ்டாலின் அருகிலேயே பின் பக்கம் அன்பில் மகேஷ் அமர்ந்து இருந்தார். உதயநிதி மட்டுமே இன்று ஜீன்ஸ் பேண்ட் அணிந்தபடி வந்து இருந்தார். தன் அரசியலில் வாழ்க்கை ஆரம்பித்ததிலிருந்து உதயநிதி ஸ்டாலின் திமுக கொடியுடன் வெள்ளை சட்டை மட்டுமே அணிந்து இருப்பார். வேட்டி சட்டையுடன் அவர் பொதுவெளியில் வந்தது கிடையாது. அதனையே உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராக பதவியேற்ற பிறகும் கடைபிடித்து வருகிறார்.
மேலும் வேட்டி சட்டை அணிந்து சென்றால் தனது வசதியாக இருக்காது எனவும் பல்வேறு இடங்களில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டு இருக்கிறார். அமைச்சரான பின் அவர் வேட்டி, சட்டை அணிவாரா என்ற கேள்வி இருந்தது. அந்த கேள்விக்கும் உதயநிதி பதிலளித்துள்ளார். அமைச்சரவை மாற்றி அமைக்கப்பெற்ற பின் ஆளுநருடன் அனைத்து அமைச்சர்களும் எடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.