94 சதவீத ‘காதல்’ போக்சோ வழக்குகள் விடுதலையில் முடிகிறது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை பாலியல் குற்றங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டத போக்சோ சட்டம். குறிப்பாக பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் போது, இந்திய தண்டணைச் சட்டத்தால் மற்ற வழக்குகளைப் போல் கையாளாமல் பிரத்யேகமாக இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டது.
அறியாமையாலும், கட்டாயத்தின் பேரிலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்ககப்படும் சிறார்களுக்கான வரப்பிரசாதமாவே பார்க்கப்பட்டது இந்த சட்டம். ஆனால் அண்மையில் வெளியான தரவுகளின்படி பெரும்பாலான போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் அவர்கள் தப்பித்து வருகிறார்கள். குறிப்பாக வயது குறித்த சிக்கலால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான காதல் வழக்குகளில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்குழந்தைகளின் குடும்பத்தார்கள் தான் புகார் தருகிறார்கள். அதில் ஒன்றுமறியாத தனது பெண் குழந்தையை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுவிட்டதாகவும், ஒப்புதல் இல்லாமல் வலுக்கட்டாயமாக பாலுறவில் ஈடுபடுத்தியதாகவும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு அதன்படி முதல் தகவல்அறிக்கைகளும் பதிவு செய்யப்படுகிறது. இது போன்ற நிகழ்வின் போது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் போது, ஒருமித்த சம்மதம் மற்றும் விருப்ப பாலியல் உறவுக்கான வயது வரம்பு உள்ளிட்ட சர்ச்சைகளால் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். அல்லது புனைவான வழக்குகளாக கருதப்பட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது. இது போக்சோ சட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
அசாம், மகாராஷ்டரா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் கடந்த 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை பதிவான வழக்குகளில் தீர்ப்பிடப்பட்ட வழக்குள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் பாலியல் உறவை சம்மதிக்கும் வயது குறித்த குழப்பத்தால் 94 விழுக்காடு வழக்குகள் விடுதலையில் முடிந்துள்ளன. குறிப்பிடப்பட்ட நான்கு ஆண்டுகளில் இந்த மூன்று மாநிலங்களில் 7,064 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்களில் 1,715 வழக்குகள் காதல் தொடர்பான வழக்குகள். இந்த வழக்ககளில் 1,609 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
அதற்கு முக்கிய காரணம் பாலியல் உறவை சம்மதிக்கும் வயது குறித்த சர்ச்சை. 106 வழக்குகளில் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காதல் விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வயது 16 முதல் 18 வரை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வயது சுயமாக பாலியல் உறவுக்கு சம்மதிக்கும் தகுதியுடைய வயதா?என்பதை தீர்மானிக்க முறையான சட்ட வரையறை இல்லை.
அதனால் தண்டிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து போகிறது. அதோடு பெரும்பாலான வழக்ககளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களின் நேரிடையான புகாரோ, குற்றம் சாட்டுதலோ பெறப்படுவதில்லை. இந்த அனுகூலமும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கிடைத்து விடுகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதாவது பாலியல் உறவை சுயமாக சம்மதிக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்படுவதை சட்டரீதியாக வரையறை செய்ய வேண்டிய அவசியமும், அவசரமும் எழுந்துள்ளது என்றும், அந்த விவகாரத்தை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.