‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று (14) தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசமெங்கும் நடைபெற்றது.
அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயமான அறிவகத்திலும் தேசத்தின் குரலை நினைவேந்தி வணக்க நிகழ்வு நடைபெற்றது.
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் கலைவாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஈகைச்சுடரை கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் தவபாலன் ஏற்ற மலர் மாலையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அணிவித்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தினர்.
இந்த நிகழ்வில் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பரந்து வாழும் உலகத்தில் தமிழ் மக்கள் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஆவார்.
தாயகத்தில் போர் உக்கிரம் பெற்ற காலகட்டப்பகுதிகளில் தாயத்தில் இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை நகர்த்த முடியாத சூழலிலும் உடல்நலத்தைக் கருத்தில்கொள்ளாது பன்னாட்டுக்குச் சென்று தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்துகூறியவரே தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.