கோட்டாவை விரட்டியடித்து விட்டு ஜனாதிபதியாகத் திட்டம் போட்ட பஸில்! – அம்பலப்படுத்தினார் கம்மன்பில

“கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அந்த நெருக்கடியை மேலும் பெரிதாக்குவதற்கே பஸில் ராஜபக்ச நடவடிக்கை எடுத்திருந்தார். கோட்டாவை விரட்டி நாடாளுமன்றம் ஊடாகத் தான் ஜனாதிபதியாகும் திட்டத்திலேயே பஸில் செயற்பட்டார்” – என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
“கோட்டாவின் ஆட்சியில் தோன்றிய பொருளாதார நெருக்கடி உக்கிரமடையாமல் தடுப்பதற்குப் போதுமான வாய்ப்பு இருந்தது. ஆனால், பஸில் அதைச் செய்யவில்லை. நிலைமையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு அவர் திட்டம் தீட்டினார்.
பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்து கோட்டா பதவியை விட்டு ஓடினால் நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாகும் திட்டம் ஒன்றை பஸில் வகுத்திருந்தார். அதற்காவே இரசாயன பசளைக்கான தடைக்கு அவர் அனுமதி வழங்கினார்.
இரசாயனப் பசளைக்கான தடை எந்தளவு விளைவை நாட்டில் ஏற்படுத்தும் என்று தெரிந்தும்கூட பஸில் அதற்கு அனுமதி வழங்கினார்.
அதேபோல் ,எரிபொருள் நெருக்கடி வந்தபோது 14 மணிநேர மின்வெட்டுக்கு பஸில் அனுமதி வழங்கினார்.
இவை அனைத்தும் நாட்டில் பெரும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தும். அதனூடாகக் கோட்டா பதவியை விட்டு ஓடுவார் என்று பஸில் அறிந்து வைத்திருந்தார்.
அப்படி நடந்தால் நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாவதுதான் பஸிலின் திட்டம். ஆனால், இடையில் வந்து ரணில் விக்கிரமசிங்க புகுந்துகொண்டதால் எல்லாம் பிழைத்துவிட்டது” – என்றார்.