கடன் வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி தாக்குதல்
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரா சுவாமி. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் தனிநபர் கடன் வாங்கியுள்ளார். மாதம் தோறும் இஎம்ஐ கட்ட வேண்டிய சுரேந்திரா சுவாமி, அதை முறையாக கட்டவில்லை. எனவே, இஎம்ஐ தொகை வசூல் செய்வதற்காக நிதி நிறுவனத்தில் பணிபுரியும் நவீன், குல்தீப் என்ற இரு ஊழியர்கள் கடனை வசூலிக்க சுரேந்திரா சுவாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சுரேந்திரா வீட்டில் இல்லை. எனவே, அவரை ஊழியர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
போனை எடுத்து பேசிய சுரேந்திரா தான் அருகே உள்ள கடை பக்கத்தில் நிற்பதாக கூறியுள்ளார். அவர்களும் அந்த இடத்திற்கு சென்று சுரேந்திராவை பார்த்துள்ளனர்.அப்போது, நடந்த பேச்சு வார்த்தையின் போது வங்கி ஊழியர்களுக்கும் சுரேந்திராவுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுரேந்திரா, அருகே இருந்த கடையில் கொதிக்கும் எண்ணெய்யை ஜக்கில் எடுத்து வந்து இரு ஊழியர்கள் மீதும் ஊற்றியுள்ளார்.
இதில் ஊழியர்கள் நவீன் குமார் மற்றும் குல்தீப் இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் குல்தீப்பிற்கு முதலுதவி தரப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். அதேவேளை, நவீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், ஊழியர்கள் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சுரேந்திரா தற்போது தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ள சுரேந்திரா மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை தீவிரமாக தேடி வருகிறது.