முல்லையில். சிறப்புற இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்!
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட ”சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்” முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் (16) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சிறப்புற நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்துடன் இணைந்து நடாத்திய குறித்த நிகழ்வு முல்லை.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் ஜெ.சுதாநாதன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த மாற்றுத்திறனாளிகள் தினம் “அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய அபிவிருத்திக்கான பண்புரு மாற்றுத் தீர்வு : அணுகத்தக்க மற்றும் நியாயமான உலகை உருவாக்குவதற்கு சக்தியை வழங்குவதில் புத்தாக்கத்தின் வகிபாகம்” எனும் தொனிப்பொருளிற்கு அமைய நடைபெற்றது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாகவும், கௌரவ விருந்தினராக வட மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் செ.அகல்யா ஆகியோர் கலந்து சிறிப்பித்தனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், DEVPRO நிறுவனத்தின் பிராந்திய திட்ட இணைப்பாளர் ஆர்.மகேந்திரன், சிறுவர் நிதியத்தின் CBID நிபுணர் சுதர்சன், VOICE Area Federation திட்ட முகாமையாளர் டெவின், ORHAN நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திவாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டு, மாற்றுத்திறனாளியின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய மாற்றுத்திறனாளி அமைப்புக்களின் உறுப்பினர்களின் கண்கவர் நடனம், பாடல்கள், கவிதைகள் முதலான பல்வேறு கலைநிகழ்வுகள் மேடையினை அலங்கரித்திருந்தது.
இதன்போது கலைநிகழ்வுகள் வழங்கிய மற்றும் வருகைதந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அன்பளிப்புப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தினால் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த, பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் நிறுவன தலைவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் தசரதன், அனுசரனை வழங்கிய நிறுவனங்களின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர், சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச மாற்றுத்திறனாளி அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
1992 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளிற்கு அமைய டிசம்பர் மாதம் 3ம் திகதி மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.