“தொழிற்படிப்புகளில் தாய்மொழி கல்வி வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்த அமித்ஷா

வாரணாசியில் ஒரு மாத காலமாக நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது. இது நாட்டில் உள்ள மற்ற கலாசாரங்களையும் மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் இடையேயான பாரம்பரியமான நட்புறவுக்கு புத்துயிரூட்டும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை கடந்த மாதம் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டிலிருந்து 12 சிறப்பு ரயில்கள் மூலம் 2,500-க்கும் மேற்பட்டோர் காசிக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இதன்படி, கல்வி பரிமாற்றம், கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், விளையாட்டு, உணவுக் காட்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

வாரணாசியில் நேற்று நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய அமித் ஷா, இந்த நிகழ்ச்சி, தமிழ்நாடு மற்றும் காசி இடையே மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள மற்ற கலாச்சாரங்களையும் மீண்டும் இணைப்பதற்கு வழியை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாடு முழுவதும் ஒரே கலாச்சாரம் என்ற ஒருங்கிணைப்பு வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் இருந்த கலாசார ஒற்றுமைக்கு நீண்ட காலமாக நீடித்த காலனி ஆதிக்கம் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், கலாச்சார இணைப்புக்கு கடந்த காலங்களில் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட படிப்புகளை தமிழிலேயே கற்பிக்க வேண்டும் என்று மாநில அரசை அவர் கேட்டுக் கொண்டார். விழாவில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த ஒரு மாத காலத்தில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்துக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் மக்களின் இதயங்களில் தமிழ் வாழ்வதாகவும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். ஒரு மாத கால நிகழ்ச்சி, தமிழ்நாடு மற்றும் காசி இடையேயான நல்லுறவை வலுப்படுத்தியுள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.

காசி தமிழ் சங்கமத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது, தமிழ்நாடு-காசி இடையே விரைவில் நிரந்தரமாக ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.