வேலுகுமார் மீதான இடைக்காலத் தடை நீக்கம் – கூட்டணியின் தலைவர் மனோ அறிவிப்பு.
தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் மீண்டும் கூட்டணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
“அவர் மீதான இடைக்காலத் தடை மீளப்பெறப்பட்டுள்ளது” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் உயர்பீடம் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய போது, இவ்விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, சிவில் சமூகத்தினரின் கோரிக்கை பரீசிலிக்கப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை தமிழ் முற்போக்குக் கூட்டணி எடுத்திருந்தது. எனினும், கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நடுநிலை வகித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசியல் தந்திரத்தில் இருந்து விடுபட்டு மக்கள் வழிக்குத் திரும்ப வேண்டும் என்பதாலேயே இவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்டது என வேலுகுமார் அறிவித்தார்.
வாக்கெடுப்பின்போது கூட்டணியின் முடிவுக்கு இணங்கிச் செயற்படாததால், வேலுகுமாரைக் கூட்டணியில் இருந்து இடைநிறுத்தும் அறிவிப்பை தலைவர் மனோ கணேசன் விடுத்திருந்தார்.
இந்த முடிவுக்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டிக் கிளை கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. ‘நடுநிலை’ என்பது அரசுக்கான ஆதரவு அல்ல என்பதால் வேலுகுமார் மீதான தடைநீக்கப்பட வேண்டும் எனவும் தலைமைப்பீடத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அத்துடன், சிவில் சமூகப பிரதிநிதிகள் சிலரும் இந்த விவகாரம் தொடர்பில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இந்நிலையிலேயே வேலுகுமார் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.