170 ரோகிங்கியர்களுடன் மற்றொரு படகு மூழ்கியது! – மீட்கப்பட்டவர்கள் பரபரப்புத் தகவல்.
பங்களாதேஷில் இருந்து ரோகிங்கிய அகதிகளுடன் இந்தோனேஷியா நோக்கிப் புறப்பட்ட இரு படகுகளில் ஒன்று தமது கண் முன்னேயே 170 பேருடன் கடலில் மூழ்கியதாக வடக்குக் கடலில் மீட்கப்பட்ட படகில் இருந்து காங்கேசன்துறைக்குக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் கூறுகையில்,
“104 பேருடன் முப்பது நாட்களுக்கு முன்பு பங்களாதேஷில் இருந்து புறப்பட்ட நாம் படகு பழுதடைந்தமையால் இந்தோனேஷியா நோக்கித் தொடர்ந்து பயணிக்க முடியாத அவலத்துக்குத் தள்ளப்பட்டோம்.
உணவு இல்லை, நீர் இல்லை என்ற போதும், இருந்தவற்றை சிறுவர்களுக்கு மட்டும் வழங்கினோம். பெரியவர்கள் உணவு இன்றியே பட்டினியாக இருந்தோம். முப்பது நாட்களில் 11 நாட்கள் மட்டுமே உணவு கிடைத்தது.
இதேநேரம் எம்முடன் இன்னும் ஒரு படகு சுமார் 170 பேருடன் பங்களாதேஷில் இருந்து புறப்பட்டது. அந்தப் படகும் பழுதடைந்த காரணத்தால் முழுமையாக நீரில் மூழ்கியது. அதனைக் கண்ணுற்றோம்” – என்றனர்.
இதேநேரம் மீட்கப்பட்டவர்கள் உணவு இன்றி அதிக நாட்கள் இருந்தமையால், உடல் மெலிந்து, நலிவுற்ற தோற்றத்திலேயே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.