அமெரிக்க தயாரிப்பு ஏவுகணை சுட்டு வீழ்த்திவிட்டோம்- ரஷியா தகவல்.
உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷியா, பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஏராளமான ஏவுகணைகளை ஏவி உக்ரைனை நிலைகுலையச் செய்தது.
அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது. அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு ரஷ்ய பிராந்தியத்தில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 4 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா கூறி உள்ளது.
பெல்கோரோட் பிராந்தியத்தின் வான்வெளியில் நான்கு அமெரிக்க ‘ஹார்ம்’ ராடார் எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பிராந்தியம் உக்ரைன் தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் கூறி உள்ளது.