சீனாவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் கூடும்.
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கொரோனா தொற்று தொடர்புடைய உயிரிழப்புகளும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியானது.
சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்தபடியே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.
இறுதி சடங்கு செய்யும் சேவை நிறுவன பெண் ஊழியர் ஒருவர் கூறும் போது, “மீண்டும் கொரோனா பரவலுக்கு பிறகு எங்களது பணிச்சுமை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாற்றுகிறோம். தினமும் மயானத்துக்கு 200 உடல்கள் வருகின்றன. வழக்கமாக ஒரு நாளைக்கு 30 அல்லது 40 உடல்கள்தான் வரும்” என்றார்.
மேலும் தலைநகர் பீஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தகனம் செய்யும் இடத்தில் உடல்கள் நிரம்பி வழிகின்றன என்று வால் ஸ்ட்ரீப ஜர்னல் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் 60 சதவீதம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.