“திமுக கூட்டணிக்கு வர கமல்ஹாசன் தயார்..” காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை பேட்டி!
தமிழ்நாடு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து கமல்ஹாசனும் பிற கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வர தயாராக இருக்கின்றனர்.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பாலிவுட் நடிகர்கள், முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் என பல்வேறு துறையினர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் இந்த நடை பயணத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
எல்லோரும் சேர்ந்து இந்தியாவின் ஒற்றுமை பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வது இந்திய தேசத்தின் மீது யார் யாருக்கெல்லாம் பற்று உள்ளது என்பதை வெளிக் கொணரும் விதமாக அமைந்துள்ளதாக பார்க்கிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ராகுல் காந்தி தன் சொந்த அண்ணன் போல கருதுகிறார். இந்த கூட்டணி இயற்கையானதாக அமைந்துள்ளது எனவே கமல்ஹாசனுடம் தனி கூட்டணிக்கு எண்ணம் இல்லை.
இந்த நடை பயணத்திற்கு யார் அழைத்தார்கள் என்பது முக்கியமல்ல ஒரு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு சதவீதம் வாக்குகள் கூட முக்கியமாக அமைகிறது.
தமிழக முதலமைச்சர் தூக்கம் இல்லாமல் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் இதனை பார்க்கக்கூடிய எதிரணியினர் திமுக கூட்டணிக்கு வர தயாராக உள்ளனர். அந்த வகையில் கமல்ஹாசனும் கூட்டணிக்கு வர தயாராக இருப்பார்.
கமல்ஹாசன் சனாதானவாதிகளை எதிர்க்கக் கூடியவராக தான் திகழ்ந்து வருகிறார். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு சமுதாயமாகத்தான் இருக்க வேண்டும் என்பது கமலஹாசன் நிலைப்பாடாக உள்ளது” என தெரித்தார்.
மேலும் தேசத்தின் மீது பற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்தும் ராகுல்காந்தி நடைபயணத்தில் கலந்து கொண்டால் மகிழ்ச்சி என கூறினார்.