தினேஷ் ஷாப்டரை கொலை செய்தவர் மிக நெருக்கமானவர் : தனிமையில் வந்தது அதனால்தான்
ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் பொரளை மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது நெருங்கிய நண்பரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டுள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வாளர்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
தினேஷ் ஷாப்டர் திடீரென பொரளை செல்வதாகக் கூறி கொழும்பு 07, மல் வீதியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறியதும், அவரது கார் நேராக பொரளை மயானத்திற்கே வந்ததும், தொலைபேசி அலசல் மூலம் வெளிவந்த உண்மைகளும் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
பல நபர்கள் தமது சந்தேகத்தின் கீழ் வந்துள்ளதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவர்களின் நடத்தைகள் குறித்த பின்னணிகளை கடுமையாக அவதானித்து ஆராய்வதோடு அவர்களின் கையடக்க தொலைபேசி வலையமைப்புகளின் தரவுகளை பரிசீலிக்க பணித்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
காரை ஓட்டிச் சென்றவர் பொரளை பொது மயானத்திற்குள் உள்ள வீதிகளை நன்கு புரிந்து கொண்டவர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். அவ்வாறானதொரு புரிதல் ஏற்படுவதற்கு, அவர் பலமுறை மயானத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்றும், தினேஷ் ஷாப்டர் தனது காரை வீட்டிலிருந்து மயானத்திற்கு ஓட்டிச் சென்றிருந்தால், பொரளை மயானத்திற்குச் செல்வது இது அவர் அங்கு சென்ற முதல் முறையல்ல என்றும் அந்த அதிகாரி கூறினார்.
“தினேஷ் ஷாஃப்டர் போன்ற உயர் சமூகத் தொழிலதிபர் ஒருவர் , தெரியாத ஒருவரைச் சந்திக்க கல்லறைக்குச் செல்வது ஒரு அசாதாரணமான நிகழ்வு. மேலும் தினேஷ் ஷாஃப்டர் , அவரது வீட்டிலிருந்து தனியாகவே புறப்பட்டுள்ளார். அவர் ஒரு டிரைவருடன் வந்திருக்கலாம். அப்படி அவர் செல்லவில்லை. எனவே, மிகவும் தனிப்பட்ட விஷயங்களுக்காக இப்படியான பயணத்தை அவர் மேற்கொண்டது போல தெரிகிறது. அத்தகைய பயணத்தில் கூட மிகவும் விசுவாசமான ஒரு நபரை சந்திக்க வந்திருக்கலாம். அப்படியான ஒருவராலேயே வரவழைத்து ஏமாற்றுவதும் சாத்தியமாகும். அவர் பயணித்த வழியில், யாராவது ஒருவர் அவரது வாகனத்தில் ஏறி தினேஷ் ஷாஃப்டரை கல்லறைக்கு அழைத்தும் சென்றிருக்கலாம். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் அவ்வாறான தடயங்கள் எதுவும் வெளிவரவில்லை. மேலும் இது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. யாராவது காரில் ஏறவில்லை என்றால், கல்லறையில் அவரைச் சந்திக்க ஒருவர் ஏற்கனவே வந்து காத்திருந்துள்ளார். அவர்தான் தினேஷ் ஷாப்டரின் கொலையாளியாக இருக்க முடியும்” என்று அந்த அதிகாரி கூறினார்.
தினேஷ் ஷாப்டரை பொரளை மயானத்திற்கு அழைத்து வந்த நபர் அவரை கொல்லும் திட்டத்துடன் அங்கு அழைப்பித்துள்ளதாகவே எண்ணத் தோன்றுவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த கொலையானது திடீர் கோபத்தினாலோ அல்லது தற்செயலாக ஏற்பட்ட சம்பவத்தினாலோ நடந்ததல்ல என்றும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
“டிரைவர் இருக்கையில் தினேஷ் ஷாப்டர் இருந்தபோதே இந்தக் கொலை முயற்சி நடந்துள்ளது. அவர் கண்டுபிடிக்கப்பட்டபோது அவர் ஓட்டுநர் இருக்கையில் இருந்தார். அவரது சக ஊழியர் மற்றும் கல்லறை ஊழியர் ஒருவர் கொடுத்த வாக்குமூலங்களிலிருந்து இது தெளிவாகிறது. அதன்படி, தினேஷ் ஷாப்டரே காரை ஓட்டியுள்ளார் என்பது மேலும் உறுதியாகிறது. தினேஷ் ஷாஃப்டர் தனது காரில் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டார். அவரது கைகள் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேபிள்கள் , கல்லறையைச் சுற்றிக் காணப்படும் கயிறுகள் போன்ற ஒன்றல்ல. பிளாஸ்டிக் கேபிள் இணைப்புகளுடன் கட்டுவது , கயிறுகளால் கட்டுவதை விட வேகமாகவும் எளிதாகவும் இறுக்கி கட்ட முடியும். தவிர, தினேஷ் ஷாஃப்டரின் கழுத்தும் கம்பியால் நெரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பார்வையில், தரையில் இருந்து அந்தக் கம்பியை எடுத்தது போல் தெரியவில்லை. அந்த கம்பி புதியது. அவர் ஓட்டுநர் இருக்கையில் வைத்து கழுத்தில் கம்பியால் கட்டப்பட்டிருந்தார். கேபிள் இணைப்புகள் மற்றும் கம்பிகள் கல்லறையில் பாவனைக்கு பயன்படுத்தும் பொருட்கள் அல்ல. திட்டமிட்டு தினேஷ் ஷாப்டரை கொலை செய்ய இவற்றை கையோடு கொண்டு வந்துள்ளனர். அதன்படி, தினேஷ் ஷாப்டரை கொல்வதற்காகவே திட்டமிட்டு அவரை கல்லறைக்கு வருவித்துள்ளது தெரிகிறது,” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தினேஷ் ஷாப்டர் கொலையை விசாரித்து வருவதாகவும், கொலையின் மர்மத்தை கண்டு பிடித்து, கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினேஷ் ஷாப்டரின் வீட்டிலிருந்து சென்ற பாதை முழுவதும் உள்ள சீசீடிவீ பாதுகாப்பு கமெராக்கள் மூலம் கண்காணித்த, அவரது வாகனத்தின் பின்னால் பயணித்த பல வாகனங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளன.
அந்த வாகனங்களின் எண்களின் அடிப்படையில் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் காவல்துறை உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஷாப்டர் பயணித்த காரில் கண்டெடுக்கப்பட்ட கைரேகைகளின் அறிக்கை நேற்று (20) கிடைக்கப்பெற்றதால், சந்தேக நபர்களின் கைரேகைகளுடன் ஒத்துப் போகிறதா என்பதை கண்டறியவுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார். இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (19) அவரது மனைவி டானி ஷாப்டரின் வாக்குமூலங்கள் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் முதன்முறையாக பெறப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.