தமிழர் தரப்புடன் ரணில் இன்று திரும்பவும் பேச்சு.

தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு காணும் விடயங்கள் குறித்து தொடர்ந்து பேசுவதற்காகத் தமிழர் தரப்பை இன்று மாலை மீண்டும் பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளார்.

இந்தப் பேச்சு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 6 மணி முதல் நடைபெறும்.

அரசு தரப்பில் ஜனாதிபதியுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்‌ச, அலி சப்ரி, பிரசன்ன ரணங்க, சுசில் பிரேமஜய்ந்த ஆகியோர் பங்குபற்றுவர் எனத் தெரிகின்றது.

இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி., ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. ஆகியோருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சார்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. தகவல் தெரிவித்திருக்கின்றார் என அறியவந்தது.

கடந்த 13ஆம் திகதி சர்வகட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை முன்கொண்டு செல்வதற்கான வழிவகைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவுகளும் நடவடிக்கை திட்டங்களும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* காணி ஆக்கிரமிப்பை நிறுத்துதல்
* ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைத்தல்
* அரசியல் கைதிகளை விடுவித்தல்
* காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்குத் தீர்வு காணல்
* 13 ஆம் திருத்தச் சட்ட ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துதல். நீக்கப்பட்ட அதிகாரங்களை மீள இணைத்தல்
* மாகாண சபைத் தேர்தல்
* இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளி குறித்து ஆராய்தல்

– இவை போன்ற விடயங்கள் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டு செயற்றிட்டங்கள் வரையறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.