உதவித்தொகை விவகாரம்.. மத்திய அரசு தவறினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ரகுபதி, பொன்முடி மற்றும் அன்பில் மகேஸ் உள்ளிட்டோரும் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ்,ஜே. கருணாநிதி, ஐ-டிரீமஸ் மூர்த்தி உள்ளிட்டரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இடம்பெற்ற லயோகா கல்லூரி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

அதனை தொடர்ந்து திமுக அரசின் சாதனைகளை தொகுத்து, காணொலி வீடியோ வெளியிடப்பட்டது. பின்னர் விழா கேக் வெட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், விருந்தினர்களுக்கும், மேடையில் இருந்தவர்களுக்கும் வழங்கினார்.

அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைத்து நடத்தப்பட்ட இந்த விழாவில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர். கடைசியாக சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், சமத்துவ விழாவாக நடக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தனது கடமையாக கருதுவதாக கூறினார். சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது திமுக அரசு எனவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மேடையில் வெளியிடப்பட்ட குறும்படத்தில், திமுக அரசின் சாதனைகளை அழகாக காட்சிப்படுத்தியிருந்தனர் என்று குறிப்பிட்டார். மேலும்,அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான உதவித்தொகை விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால், தமிழக அரசு முடிந்த அளவு நடவடிக்கை எடுக்கும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில், கிறிஸ்துமஸ் குடிலையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுக்கும் கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.