ஊடறுத்து நுழைய முயலும் ஏகாதிபத்தியத்தின் கரங்கள்
தென்னமெரிக்கப் பிராந்தியத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் விசேட கவனத்துக்கு உரியவை.
ஒன்று, பெரு நாட்டின் அரசுத் தலைவர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவி விலக்கப்பட்ட விவகாரம்.
மற்றையது, ஆர்ஜென்ரீனாவில் துணை அரசுத் தலைவியாக விளங்கும் கிறிஸ்ரினா டி கிர்ஹ்னர் மீதான ஊழல் வழக்கும், அதன் மீது வழங்கப்பட்ட தண்டனையும். இந்த இரண்டு விடயங்களிலும் பொதுவான பல அம்சங்கள் உள்ளன. அதுபோன்ற பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்
பெற்ரோ காஸ்ரில்லோ. தொழில்முறை ஆசிரியரும் தொழிற்சங்க வாதியுமான இவர் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டவர். இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதலாகவே இவருக்கு எதிரான செயற்பாடுகளை அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்தனர். எதிர்க் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றம் காஸ்ரில்லோவின் அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போடும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பம் முதலே மேற்கொண்டு வந்தது. தவிர, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணைகளும் நடைபெற்று வந்தன.
தன் மீதான பிடி இறுகுவதை உணர்ந்த காஸ்ரில்லோ, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து ஆட்சியைத் தொடர்ந்தும் முன்னெடுக்க முயன்ற போது, நாடாளுமன்றம் முந்திக் கொண்டது. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு விடப்பட்ட போது 101 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். வெறும் ஆறு பேர் மாத்திரமே எதிர்த்து வாக்களித்தனர்.
காஸ்ரில்லோ பதவி ஏற்ற நாள் முதலாக அவரை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவி விலக்க முயற்சி மேற்கொண்டு வந்த வலதுசாரி உறுப்பினர்கள் இறுதியாகத் தமது மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றனர்.
தவிர, காஸ்ரில்லோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க காவல் துறையும், படைத் துறையும் மறுப்புத் தெரிவித்து விட்டன. இந்நிலையில், துணை அரசுத் தலைவியாகப் பதவி வகித்த டினா பொலுவார்ட்டே அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
நம்பிக்கை இல்லாப் பிரேரணை மூலம் காஸ்ரில்லோ பதவியை இழக்கும் நிலை உருவானால் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என முன்னர் தெரிவித்து வந்த – பெருவின் முதலாவது பெண் அரசுத் தலைவி என்ற பெருமையைப் பெற்ற – டினா பொலுவார்ட்டே தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளமை தெரிகின்றது. வலதுசாரிகளின் பிடியில் உள்ள நாடாளுமன்றம் அவரையும் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, சபாநாயகராக உள்ள ஜோஸ் வில்லியம்ஸை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்ய முயற்சித்து வருகின்றது. பாசிசக் கருத்துக்களைக் கொண்ட முன்னாள் படைத் துறை அதிகாரியான வில்லியம்ஸ் மார்க்சிசக் கருத்துக்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைப் பேணும் ஒருவர். அது மாத்திரமன்றி போதைக் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு வைத்துள்ளதான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானவர்.
பெருவின் அரசியல் நிலவரம் தொடர்ச்சியாக நிலையற்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது. கடந்த நான்கு வருடங்களில் அந்த நாடு ஆறு அரசுத் தலைவர்களைக் கண்டுள்ளது. முன்னைய அரசுத் தலைவர்கள் யாவரும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுகள் ஒரு அரசியல் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. காஸ்ரில்லோ மீதான ஊழல் குற்றச்சாட்டும் அத்தகையதே. சுயாதீன நீதித் துறை செயற்பாட்டில் இல்லாத ஒரு நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் வியப்பானவையல்ல.
தற்போதைய நிலையில் காஸ்ரில்லோ கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளார். புதிதாக அவர் மீது ஆட்சிக் கவிழ்ப்புக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரின் எதிர்காலம் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பட்டு வருகின்றன.
மறுபுறம், ஏழைகளின் தலைவராகக் கருதப்படும் அவரின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அவருக்கு அதிகளவில் செல்வாக்கு உள்ள பிரதேசமாகக் கருதப்படும் அந்தாகுவேலாஸ் மாகாணத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களில் இரண்டு இளைஞர்கள் மரணத்தைத் தழுவி உள்ளனர். காவல் துறை உத்தியோகத்தர்கள் நால்வர் உட்பட இருபது பேர் காயங்களுக்கு ஆளாகி உள்ளனர். பிராந்திய விமான நிலையம் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் ஓடுபாதை உட்பட பல கட்டுமானங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
பொதுமக்கள் அமைதியைப் பேண வேண்டும் எனப் புதிய அரசுத் தலைவி வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும், ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. இதுவரை 15க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டங்களின் போது மரணத்தைத் தழுவி உள்ளனர். இழப்பதற்கு ஏதுமற்ற ஏழைகளே இத்தகைய ஆர்ப்பாட்டஙகளின் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளுள் ஒன்றாக பதில் அரசுத் தலைவி பதவி விலக வேண்டும் என்பதுவும், உடனடியாகத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதுவும் உள்ளது.
இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டவராகக் காஸ்ரில்லோ இருந்த போதிலும் அவர் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் வகையிலேயே நடந்து வந்தார். இருந்தும் அவரின் பதவிப் பறிப்புக்கு பின்புலத்தில் அமெரிக்காவே இருந்து வந்துள்ளது என்பது இரகசியமான சேதி அல்ல. தனது கொல்லைப் புறத்தில் மென்மேலும் இடதுசாரிச் சிந்தனைகளைக் கொண்டவர்கள் ஆட்சித் தலைவர்களாக வந்து கொண்டிருப்பதை அமெரிக்கா எதுவும் செய்யாமல் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கும் என நினைப்பது முட்டாள் தனமே அன்றி வேறில்லை.
இதுபோன்ற ஒரு சம்பவமே ஆர்ஜென்ரீனாவிலும் இடம்பெற்றுள்ளது. அந்த நாட்டில் தற்போதைய துணை அரசுத் தலைவியாக விளங்கும் கிர்ஹ்னர் ஊழல் வழக்கில் 6 வருட சிறைத் தண்டனையைப் பெற்றுள்ளார். தனக்கு எதிரான வழக்கு அரசியல் நோக்கத்துடன் சோடிக்கப்பட்ட ஒன்று எனத் தெரிவித்திருக்கும் அவர் அதற்கெதிராக மேன்முறையீடு செய்ய உள்ளார். 2007 முதல் 2015 வரை அந்த நாட்டின் அரசுத் தலைவியாகப் பதவி வகித்தவர் கிர்ஹ்னர். அதற்கு முன்னர் 2003 முதல் 2007 வரை அவரது கணவர் நெஸ்ரர் அரசுத் தலைவராகப் பதவி வகித்திருந்தார். இன்னும் 11 மாதங்களில் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கிர்ஹ்னர் இந்தத் தேர்தலில் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. செல்வாக்கு மிக்கவரான அவர் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே அவருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி உள்ளமை நோக்கத்தக்கது.
இதேபோன்ற ஒரு வழக்கில் கைதாகிச் சிறை வைக்கப்பட்ட நிலையிலேயே தற்போதைய பிரேசில் அரசுத் தலைவராகத் தெரிவாகி உள்ள லூலா டா சில்வா ஒரு தடவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
தென்னமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை நீதித் துறையைப் பயன்படுத்தி இதுபோன்ற வழக்குகளில் அரசியல்வாதிகளைச் சிக்க வைக்கும் போக்கை – குறிப்பாக இடதுசாரிச் சிந்தனைகளைக் கொண்டவர்களைக் குறிவைத்து நடத்தப்படுவதை – அண்மைக் காலமாக அவதானிக்க முடிகின்றது.
தனது இலக்கை வெற்றி கொள்வதற்காக ஏகாதிபத்தியம் எந்தவொரு தந்திரோபாயத்தையும் கைக்கொள்ளும் என்பது தெரிந்ததே. அது வரலாற்றில் தொடர்ந்தும் பதியப்பட்டு வந்துள்ளது. அந்தப் போக்கு தொடரும் அறிகுறிகளே மென்மேலும் தென்படுகின்றன என்பதற்கு அண்மைய எடுத்துக்காட்டுகள் பெருவும், ஆர்ஜென்ரீனாவும்.