மீண்டும் பகீர் கொடுக்கும் கொரோனா.. உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை..!
கொரோனா என்னும் அரக்கன் கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்திய கோர தாண்டவத்தை உலக மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். கொரோனா குறைந்து உலகம் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் மீண்டும் பீதியை கிளப்ப தொடங்கியிருக்கிறது உருமாறிய கொரோனா வைரஸ். சீனாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா, இப்போது, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் கொரியா என சில நாடுகளிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.
கொரோனா பரவல் அச்சத்தால் இந்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகதாரத்துறை செயலர் ராஜஸே் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இந்தியா முழுவதும் உருமாறிய ஒமிக்ரான் தொற்று குறித்து மத்திய மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கோவிட் பிஎஃப்7 வகை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் தொற்று இந்தியாவில் பரவுகிறதா என்பதை அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. எந்த வகை வைரஸ் பரவுகிறது என்பதை துல்லியமாக கண்டறிவதற்காக தற்போது எடுக்கப்படும் பாசிட்டிவ் மாதிரிகளை மேம்படுத்தப்பட்ட பரிசோதனைக்கு அனுப்பிவைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில கொரோனா பரவல் அச்சம் குறித்தும், மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி இன்று உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மாண்சுக் மாண்ட்வியா அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, முக கவசம் அணிவதன் அவசியம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சாத்தியக் கூறு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுபடுப்படுத்துவது, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதே போல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சுகாதாரத்துறை அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து பயணிகளை கண்காணித்து, அவர்களுக்கு கெரோனா சோதனையை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவெடுக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுவரை இந்தியாவில் பிஎஃப்7 ஒமிக்கரான் தொற்று இந்தியாவில் நான்கு பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
அதில் குஜராத்தை சேர்ந்தவாகள் 3 பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர். மேலும் இந்த புதிய வகை தொற்ற பரவாமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.