ரணில் – தமிழ் தரப்பு பேச்சு வார்த்தையில் நேற்று நடந்தது என்ன? – சுமந்திரன்
5 தமிழ் கைதிகள் விடுவிக்கப்படுவர்! ஏனைய கைதிகளது விடுதலை அட்டர்னி ஜெனரல் ஆலோசனை! வடக்கில் காணிகள் ஜனவரி 3ஆம் திகதி விடுவிக்கப்படும்! மீதி காணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது! மீண்டும் ஜனவரி 5ல் சந்திப்போம்! ரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல் குறித்து எம்.ஏ.சுமந்திரன் !
தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 14ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை அழைத்திருந்ததோடு , அது தொடர்பாக மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனாதிபதி மற்றும் தமிழ் கட்சிகளின் தரப்புகளோடு நேற்று இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.
அந்தக் கலந்துரையாடலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கீழ் கண்டவாறு தனது கருத்தை தெரிவித்தார்,
“ஜனாதிபதியுடன், பிரதமர், நீதி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இருந்தனர். திரு சம்பந்தனும் நானும் கலந்துரையாடலில் கலந்து கொண்டோம். திரு.டக்ளஸ் தேவானந்து அவர்களும் இணைந்து கொண்டார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அங்கிருந்து அடையாளம் காணப்பட்ட சுமார் 5 பேரை உடனடியாக விடுவிக்க முடியும். மிகுதியாக உள்ளோரை எப்படி விடுதலை செய்வது என்பது குறித்து சட்டமா அதிபர் ஆலோசனை வழங்குவார் என்றார். காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி தேசிய பாதுகாப்பு சபையில் இதற்கான பரிந்துரை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, மிகுதி காணிகள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி மீண்டும் கூடி எதிர்காலப் பணிகள் குறித்து ஆலோசிப்போம்.
கேள்வி – வெற்றிகரமான விவாதமா?
“பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. அவை நிறைவேறும் போதுதான் அது வெற்றி பெறுகிறதா இல்லையா என்பது தெரியவரும். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை” என்றார் அவர்.