போதைப்பொருள் பாவனைக்கு முடிவுகட்ட அரசியல்வாதிகள் கைகோர்க்க வேண்டும்! – முன்னாள் கல்வி அமைச்சர் வலியுறுத்து.
“இலங்கையில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்குச் சகல அரசியல்வாதிகளும் கைகோர்க்க வேண்டியது அவசியம்.”
இவ்வாறு முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது பாடசாலைகளிலும், சமூகத்திலும் போதைப்பொருள் பாவனை என்பது அதிகரித்துள்ளது. இவ்வாறான ஒரு நிலையானது முன்னெப்போதும் ஏற்படவில்லை.
நாட்டில் போதைப்பொருள் பாவனை என்பது தீவிர நிலைமையை அடைந்தமைக்கு நாம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.
விசேடமாக அரசியல்வாதிகள், வெவ்வேறு துறைகளில் உள்ளவர்கள் எனச் சகல தரப்பினரும் இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றே நான் கூறுகின்றேன்.
வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசியல் மட்டத்திலும் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.
போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளைக் கண்டு சில அரசியல் குழுக்கள் அச்சமடைந்துள்ளன என்று எமக்குத் தெரியவருகின்றது.
இந்த நிலைமை என்பது நீடிக்குமாயின் நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.
பாடசாலை மாணவர்களின் கைகளிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.
எனவே, நாட்டின் எதிர்காலத்தை வீணடிப்பதற்குப் பிரதான காரணமாக இந்த போதைப்பொருள் பயன்பாடு என்பது காணப்படுகின்றது.
இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசானது பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது” – என்றார்.