BF.7 ஒமைக்ரான் வைரஸ்.. சென்னை வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர பரிசோதனை
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 வகை ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் இரண்டு சதவீதம் பேருக்கு, விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிகுறிகள் உள்ள பயணிகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.
பயணிகள் முகக்கவசம் அணிவதுடன், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டனர். கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவில் இருந்து வந்த விமானப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வழிகாட்டு நெறிமுறைகளை பயணிகள் முறையாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில் காணொலி வாயிலாக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அந்த பயணி தனிமைப்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு சர்வதேச விமானத்திலும் ராண்டம் முறையில் 2விழுக்காடு பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து பயணிகளும் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரேண்டம் பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.