தினேஷ் ஷாப்டரின் கொலை குறித்து சகோதரர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை!
கொழும்பில் பட்டப்பகலில் கடத்திக் கொலை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரும் பிரபல தமிழ் வர்த்தகருமான தினேஷ் ஷாப்டரின் சகோதரர்கள் இருவரிடம் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
அதன்படி, கிருலப்பனையில் உள்ள அலுவலகத்துக்குச் தினேஷ் ஷாப்டரின் சகோதரர்கள் இருவரையும் நேற்று அழைத்த விசாரணை அதிகாரிகள், விசாரணை தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
விசாரணைக்குத் தேவையெனில் குறித்த இருவரையும் மீண்டும் அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பாக அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டன என்றும், அவரது மனைவியின் வாக்குமூலங்கள், தினேஷ் ஷாப்டரின் சகோதரர்கள் வழங்கிய வாக்குமூலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்றும் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரையில் சுமார் 60 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விசாரணை மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளைக் கண்காணித்ததன் மூலம் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன என்றும், ஆனால் அவை விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவற்றை ஊடகங்களுக்கு வெளியிட முடியாது என்றும் உயர் அதிகாரி கூறினார்.
கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.