உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறோம்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. இப்போர் 10 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. கிழக்கு உக்ரைனில் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார்.
மேலும் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது போரில் நாங்கள் சரண் அடைய மாட்டோம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எங்களின் இலக்கு இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம். தொடர்ந்து பாடுபடுவோம். எல்லாமே விரைவில் சிறந்ததாக முடிவடையும் என்பதை உறுதிப்படுத்த முயல்வோம். எல்லா மோதல்களும் ஏதோ ஒரு வகையில் முடிவடையும். உக்ரைன் எவ்வளவு வேகமாக புரிந்து கொள்கிறார்களோ அவ்வளவு சிறப்பாக இருக்கும். விரோதங்கள் அதிகரிப்பு நியாயமற்ற இறப்புகளுக்கு வழிவகுக்கிறது என்று நான் பலமுறை கூறியுள்ளேன்.
எவ்வளவு முரண்பட்ட கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்து கொள்கிறார்கள். இந்த உணர்வு நம்மை எதிரிப்பவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறும் போது, “ரஷியாவின் கவலைகளுக்கு உக்ரைன், அமெரிக்கா செவி சாய்க்க வில்லை. ரஷியாவை பல வீனப்படுத்த அமெரிக்கா உக்ரைனை ஒரு போர்க் களமாக பயன்படுத்துகிறது” என்றார்.