வங்கி கொள்ளைக்கு பக்கா ஸ்கெட்ச்..10 அடி நீள சுரங்கம் தோண்டி 2 கிலோ தங்கம் திருட்டு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொள்ளை கும்பல் ஒன்று சுரங்கப் பாதை அமைத்து வங்கியில் இருந்து சுமார் 2 கிலோ மதிப்பிலான தங்கங்களை திருடிச் சென்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பனுதி என்ற பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று ஊழியர்கள் வழக்கம் போல வந்த நிலையில், அங்கு கடனுக்காக தங்கங்களை வைத்திருக்கும் லாக்கர் ரூமை திறந்து பார்த்த போது ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கிருந்த தங்கங்கள் திருடப்பட்டு மாயமாகியுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறை வந்து சோதனை செய்த போது தான் கொள்ளையர்களின் அதிர்ச்சி திட்டம் அம்பலமானது. வங்கிக்கு அருகே உள்ள ஆள் புழங்காத காலி இடத்தில் 10 அடி நீளம் 4 அகலத்திற்கும் குழி தோண்டி சுரங்கம் அமைத்து சம்பவத்தன்று இரவு வங்கிக்குள் திருடர்கள் புகுந்துள்ளனர்.
உள்ளே நுழைந்ததும் விவரமாக அலாரம் மற்றும் சிசிடிவிக்களை செயலிழக்க செய்ய வைத்து சுமார் 1.8 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்து தப்பியுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூபாய் ஒரு கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை போன வங்கியில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் காவல்துறை ஆதரங்களை தேடி வருகிறது.
வங்கியை நன்கு நோட்டமிட்டு அனைத்து விவரங்களையும் அறிந்த கும்பல் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என துணை காவல் ஆணையர் விஜய் தூல் தெரிவித்துள்ளார். இந்த தங்கம் அனைத்தும் அங்கு கடன் பெற்ற 29 நபர்களுக்கு சொந்தமானவை என வங்கி மேலாளர் நீரஜ் ராய் கூறியுள்ளார். கொள்ளையர்களை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை மும்முரமாக களமிறங்கியுள்ளது.