முல்லைத்தீவில் வணிகர் கழுத்து நெரித்துப் படுகொலை!
முல்லைத்தீவு, முள்ளியவளை – நீராவிப்பிட்டிப் பகுதியில் சிறு வியாபார வணிக நிலையம் நடத்தி வந்த வணிகர் ஒருவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
அமிர்தலிங்கம் தனபாலசிங்கம் (வயது 68) என்ற நபரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார் என்று முல்லைத்தீவு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
குறித்த வணிகர் அவரது கடைக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர், கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று மாவட்ட மருத்துவமனையின் சட்டமருத்துவ அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தடயவியல் பொலிஸாரும் வணிக நிலையத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.